CAA-ல் அரசுக்கு எதிராக கருத்து: ஆளுநர் உரை நிகழ்த்த எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு...கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

திருவனந்தபுரம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் முதலில்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலுங்கானா மாநில  சட்டப்பேரவையிலும் CAA-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்போவதாக மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் சிஏஏ.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இதுபோன்ற தீர்மானங்களால் பயனில்லை என்றும், மத்திய அரசின் சட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அம்மாநில கவர்னர் ஆரிப்  முகமது கான் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரள சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் ஆரிப் முகமது கானை திரும்ப பெற ஜனாதிபதியை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற  வலியுறுத்தி சபாநாயகரிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்தார்.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவை தொடங்கிய முதல் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முழுக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. பேரவைக்கு  ஆளுநர் ஆரிப் முகமது கான், உரை நிகழ்த்த எதிர்ப்பு தெரிவித்து, எம்எம்ஏ-க்கள் தடுத்து நிறுத்தியதால், அவை காவல்கள் பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரை அழைத்து சென்றார். இருப்பினும் கடும் அமளிக்கு இடையே  ஆளுநர் உரை நிகழ்த்தி வருகிறார்.

‘உரிமை உண்டு’

கவர்னர் ஆரிப் முகமது கான் கூறுகையில், ‘‘மரபுப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பார். அரசுக்கு அறிவுரை கூறவும் எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு. அதை மோதல் போக்காக   யாரும் எடுத்துக் கொள்ள கூடாது. ஜனாதிபதிதான் என்னை நியமித்தார் .என்னை திரும்ப பெறக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். அது சட்டப்படி செல்லுமா என்பதை அவர்கள்தான்   முடிவு செய்யவேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு’’ என்றார்.

Related Stories: