வருமானம் உயரவில்லை; வேலை வாய்ப்பு இல்லை: நாட்டின் கடன் ரூ.91.01 லட்சம் கோடி உயர்வு...காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: நாட்டின் கடன் 5½ ஆண்டுகளில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கவுரவ் வல்லப், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம்  பேட்டியளித்தார். அப்போது, நாட்டின் கடன் 2014 மார்ச் மாதம் ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அது ரூ.91.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கடன் ரூ.37.9 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இது 71.36 சதவீத உயர்வு  ஆகும். ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதாசாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக இருந்தது, இப்போது இரு மடங்காக (10.3 சதவீதம்) உயர்ந்துள்ளது என்றார்.

வருமானம் உயரவில்லை. வேலை வாய்ப்பு இல்லை. இப்படி கடன் உயர்ந்தால் எப்படி அந்த சுமையை தாங்கப்போகிறோம்? பாரதீய ஜனதா கட்சி அரசின் தோல்விக்காக இந்திய மக்கள் இந்த கடனை சுமக்க வேண்டுமா? பிரதமரும், நிதி  மந்திரியும் இந்த கவலைக்கு வரும் பட்ஜெட்டில் தீர்வு காணுங்கள் என்று கூறினார்.

2018-ல் நிதி அமைச்சகத்தின் அரசின் கடன் விவரம்:

மத்திய நிதி அமைச்சகத்தின் அரசின் கடன் விவரம் பற்றிய தரவுகளில் செப்டம்பர் 2018 காலிறுதி வரையிலான ஒட்டுமொத்த கடன் 82,03,253 கோடியாக இருப்பதாகக் கூறப்பட்டது. நிதியமைச்சகத்தின் கடன் தரவுகள் விவரங்கள் கொண்டு கடந்த  2018 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2014-ல் 54,90,763  கோடியாக இருந்த நாட்டின் கடன் 2018 செப்டம்பர் வரையில் 82,03,253 கோடியாக வந்து நிற்கிறது. இந்தியாவின் கடன் சுமை 49% உயர்ந்து இருக்கிறது என்கிறார்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த கடன் அதிகரிக்க பொதுக் கடன் அதிகரிப்பே காரணமாகி இருந்துள்ளது. நாட்டின் பொதுக் கடன் 51.7% உயர்ந்தது. 2014-ல் 48 லட்சம் கோடியாக இருந்த பொதுக் கடன் 2018 செப்டம்பர் வரையில் 73,22,311.03 கோடியாக  உயர்ந்தது. சந்தை கடனும் 47.5 சதவீதம் அதிகரித்து 52,65,284 கோடியாக உயர்ந்தது. தங்க பத்திரக் கடன் 2014 ஜூன் வரையில் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் தங்க நாணயம் உள்ளிட்ட திட்டங்களால் 2018 செப்டம்பரில் தங்க பத்திரம் மீது  ரூ.9089 கோடியாக கடன் உள்ளது. நாட்டின் கடன் சுமை 82 லட்சம் கோடி குறித்த தரவுகள் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் கடந்த 2018 டிசம்பர் 11 -ம் தேதியே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: