பார்வையாளர்களை கலங்கடித்த பாட்டு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பான இறுதிப்போட்டி மகள் பாடி முடித்தபோது தாய் மரணம்

ஜகர்த்தா: தாயின் மருத்துவ செலவுக்காக பாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டு இறுதிப் போட்டியில் மகள் பாடியபோது, நிகழ்ச்சியின் இறுதியில் அவரது தாய் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக பாட்டு போட்டி நடந்தது.. இதில், முதல் பரிசு வெல்பவர்களுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சிதி நூர் ஜன்னா ருமாஸூகுன் என்ற 14 வயது சிறுமியும் கலந்து கொண்டார். இப்போட்டியில் அவர் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம், அவரது தாயின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் சேர்ப்பதற்குதான். நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அதற்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டது. ஆனால், இளம்பெண்ணான ஜன்னாவால் என்ன செய்ய முடியும்? அவரது தந்தையாலும் அதிக பணம் சம்பாதிக்க முடியவில்லை.

இதனால், இந்த பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் ஜன்னா செயல்பட்டார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் மிக அழகாக பாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றார். இத்தகவலை தாயிடம் தெரிவித்த ஜன்னா, தான் எப்படியும் போட்டியில் வென்று பரிசுத்தொகையை கொண்டு வந்து, உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவரை அந்த தாய் உச்சிமுகர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த இறுதிப்போட்டி நடந்தது. இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. மருத்துவமனையில் இருந்தபடியே அதை ஜன்னாவின் தாய் பார்த்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் மகள் பாடி முடித்தபோது, கைத்தட்டல் விண்ணை பிளந்தது.

ஆனால், மற்றொருபுறம் நடந்த சோகம், அவர் பாடி முடித்தபோது, அவரது தாயின் உயிர் பிரிந்ததுதான். ஆனால், போட்டியில் இருந்த ஜன்னாவுக்கு இது தெரியாது. போட்டியில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதுதான்  ஜன்னாவின் குடும்பத்தினர் போன் மூலம் தாய் இறந்த தகவலை தெரிவித்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளரே இதை கேட்டு கதி கலங்கி விட்டார். அவர் ஜன்னாவிடம் வந்து, இத்தகவை கூறியபோது, அந்த இளம்பெண் சோகத்தில் கதறி அழுதது, ரசிகர்கள் அனைவரின் கண்களையும் குளமாக்கிவிட்டது.

Related Stories: