குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கொளத்தூரில் 2ம் தேதி மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் தொடக்கம்: ஆவடி- கே.எஸ்.அழகிரி, துறைமுகம்-வைகோ, கடலூர்- திருமாவளவன் பங்கேற்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வருகிற 2ம் தேதி கையெழுத்து இயக்கத்தை சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆவடியில் கே.எஸ்.அழகிரி, துறைமுகத்தில் வைகோ, கடலூரில் திருமாவளவன் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் “குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும்- என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், பிப்ரவரி 2ம் தேதி  முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை “கையெழுத்து இயக்கம் நடத்திடுவது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வருகிற பிப்ரவரி 2ம் தேதி தொடங்க உள்ள “கையெழுத்து இயக்கத்தை” அனைத்து கட்சித் தலைவர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். ஆவடி- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கும்பகோணம்- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சென்னை துறைமுகம்- மதிமுக பொது செயலாளர் வைகோ எம்.பி. விழுப்புரம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை ராயபுரம்- இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாபநாசம், தஞ்சை- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்  கே.எம்.காதர்மொகிதீன், நெய்வேலி, கடலூர்- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.. மதுரை- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஈரோடு - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், பெரம்பலூர்- இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இதுதவிர மற்ற மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளோடு கலந்து பேசி, “கையெழுத்து இயக்கத்தை” தொடங்கி வைப்பவர்களின் பெயர் மற்றும் இடம் ஆகிய விவரங்களை, அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பார்கள்.

Related Stories: