முதல்வரை விமர்சனம் செய்ததாக ஸ்டாலின் மீது மேலும் 2 அவதூறு வழக்கு : தமிழக அரசு தொடர்ந்தது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததாக ஸ்டாலின் மீது மேலும் 2 அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. நல்லாட்சி வழங்கும் அரசு பட்டியலில் தமிழக அரசுக்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதற்கு தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நிபுணர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டால், எடப்பாடி அரசு கமிஷன், கரெப்ஷன், கலெக்சனில் முதலிடம் பிடிக்கும். சட்டம் ஒழுங்கு சீரழிவில் முதல் இடம், தொழில் வளர்ச்சியில் கடைசி இடம், வேலை இல்லா திண்டாட்டத்தில் முதல் இடம், நல்லாட்சியில் பூஜ்ஜியத்திற்கு கீழே செல்லும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்த செய்தி முரசொலி நாளிதழில், எடப்பாடியின் கேடு கெட்ட மக்கள் விரோத ஊழல் ஆட்சியை தூக்கி நிறுத்த கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட நல்லாட்சி என்று சாயம் பூசுவதா என்ற தலைப்பில் செய்தி கடந்த டிசம்பர் 28ம் தேதி வெளியாகியிருந்தது.

இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோலம் வரைந்த 6 பேரை கைது செய்ததை கண்டித்து மு.க.ஸ்டாலின், பேஸ்புக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் வரைந்த ஆறு பேரை எடப்பாடி அரசு கைது செய்து, மக்களின் உரிமைகளை பறித்து தரங்கெட்ட ஆட்சியை நடத்துகிறது. அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை கூட பயன்படுத்த தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது என்று, கடந்த 29ம் தேதி பதிவிட்டிருந்தார். இது தொடர்பான செய்தி, முரசொலி நாளிதழில் 30ம் தேதி வெளியாகியிருந்தது. இந்தநிலையில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும், நோக்கில் அவதூறு கருத்து தெரிவித்த ஸ்டாலின் மீது, அவதூறு சட்டபிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் சார்பில், சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: