இரண்டு நாட்களாக அரசு பேருந்து இயக்காததால் 4 கிலோ மீட்டர் மாணவர்கள் நடந்து செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

காவேரிப்பாக்கம்:  இரண்டு நாட்களாக அரசு பேருந்து இயக்காததால் 4 கிலோ மீட்டர் நடந்து செல்வதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புதுப்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் வேடந்தாங்கல், கர்ணாவூர், ராமாபுரம், ஆலப்பாக்கம், கன்னிக்காபுரம், பிள்ளையார் குப்பம், பன்னியூர், உப்பரந்தாங்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும், இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம், விஏஓ அலுவலகம் போன்றவைகள் அமையப்பெற்றுள்ளது. இப்பகுதிக்கு  ஆற்காடு போக்குவரத்து பனிமனையில் இருந்து வழித்தடம் எண் 20 மற்றும் வழித்தடம் எண் 7ஏ ஆகிய இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் வழித்தடம் எண் 20 புதுப்பட்டு கிராமத்தில் இருந்து ஆற்காடு நகரம் வரை இயக்கப்படுகிறது. இந்ந பேருந்து விடியற்காலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணிக்கு புதுப்பட்டு கிராமத்தில் நிறுத்தப்படுகிறது. அவ்வாறு, தினந்தோறும் 5 முறை இயக்கப்படுகிறது.

இதேபோல் வழித்தடம் எண் 7ஏ வேடந்தாங்கல் கிராமத்தில் இருந்து வாலாஜா நகரம் வரை தினந்தோறும் 3 முறை இயக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினமும் மற்றும் நேற்றும் இந்த இரண்டு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள், தொழிலாளர்கள், நோயாளிகள், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும், புதுப்பட்டு கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், பன்னியூர், பிள்ளையார்குப்பம், கங்காதரநல்லூர், கன்னிக்காபுரம், உப்பரந்தாங்கல், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் மற்றும் மாணவர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வெளியூர் பகுதிகளிலிருந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் ஆற்காடு, வாலாஜா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த கிராமத்திற்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு அதிகாரிகள் அனைத்துத் தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த இரண்டு பேருந்துகளும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: