காரைக்குடி அரசு மருத்துவமனையில் 2க்கு மேல் பெற்றால் கட்டாய ‘கு.க’

*தாய்மார்கள் புகார்

காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டால் டெலிவரி முடிந்தவுடன் கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி கட்டயப்படுத்துவதாக தாய்மார்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி ரயில்வே ரோடு மற்றும் என்ஜிஜிஓ காலனி பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ரயில்வே ரோட்டில் உள்ள மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு  உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

அதேபோல் என்ஜிஜிஓ காலனி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரசவ வார்டு, வெளி நோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு அரியக்குடி, இலுப்பகுடி, கானாடுகாத்தான், ஆலங்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் வெளிநோயாளிகளாக 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். தவிர மாதத்தில் 100க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. இம் மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டு குழந்தை பிறந்தவுடன் அந்த தாய்மார்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிக்சைக்கு ஒத்துழைக்காத தாய்மார்களை டிஸ்சார்ஜ் செய்யாமல் வேண்டும் என்றே இழுத்தடிப்பதாகவும், பணியாளர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘‘காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவம் நல்ல முறையில் பார்ப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் பிரசவத்திற்கு வருகின்றனர். இதனை டாக்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிக்சை செய்ய வேண்டும் என அனைவரையும் கட்டாயப்படுத்துகின்றனர்.

 டெலிவரி முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யாமல் பிரசவித்த தாய்மார்களை இழுத்தடிப்பதால் அவர்கள் விருப்பம் இல்லாமல் இதற்கு ஒத்துக்கொண்டு கு.க அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். குழந்தை பெறுவது கு.க அறுவை செய்து கொள்வது பெற்றோர்களின் விருப்பம். ஆனால் டாக்டர்கள் கட்டாயப்படுத்துவது கண்டிக்கதக்கது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: