உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது, ஓர் உலக மொழி ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன்

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தகவல் அளித்துள்ளார். இந்தி கற்பிக்கும் திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை என அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று துவக்கிவைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து சென்னை தரமணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது; உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் உலக மொழி ,ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படுவதாக கூறினார். மேலும் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்திக்குப் பதிலாகத் தெலுங்கைக் கற்பிக்க முடிவுசெய்திருக்கிறோம். ஏற்கனவே முடிவு செய்தபடி ஃப்ரெஞ்ச் மொழியைக் கற்பிப்பது தொடரும். இந்தி கற்பிக்க ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் தெலுங்கு கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

Related Stories: