உ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலேஷ் யாதவ் தர்ணா

லக்னோ: உன்னாவ் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் எரித்து கொன்றதை கண்டித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உன்னாவ் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமாஜ்வாதி கட்சியினருடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

நேற்று முன்தினம் காலை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு இளம்பெண் சென்றபோது, ஜாமீனில் வந்த 2 பேரும், அவர்களின் கூட்டாளிகளும் அந்த பெண்ணை வழமறித்து தாக்கி தீ வைத்து விட்டு தப்பினர். இதில், அப்பெண் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். காயமடைந்த இளம்பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: