மத்திய அரசு உதவாவிட்டால் வோடபோன் நிறுவனத்தை மூடுவதுதான் ஒரே வழி : பிர்லா வேதனை

புதுடெல்லி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால், வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என, அந்த நிறுவனத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா கூறினார். ஜியோ வருகைக்கு பிறகு, பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டம் அடைந்தன. இதை தொடர்ந்து ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களை புரட்டிப்போட்டு விட்டது. இதில், வோடபோன் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ₹53,038 கோடி. இதன் காரணமாக, நடப்பு ஆண்டு 2ம் காலாண்டில் ₹50,000 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து, மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது வோடபோன். இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த நிறுவனத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காவிட்டால், அது வோடபோன் - ஐடியா நிறுவனத்துக்கு எழுதப்பட்ட முடிவுரையாகத்தான் இருக்கும். அதோடு இந்த நிறுவனத்தின் கதை முடிந்து விடும். கடையை மூடுவதை தவிர வேறு வழியே எங்களுக்கு இல்லை. கூடுதல் முதலீடு எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து உதவி அல்லது சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பொருளாதாரம் 6 ஆண்டில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இதில் தொலைத்தொடர்பு துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் (மத்திய அரசு) உணர வேண்டும். ஏனெனில், டிஜிட்டல் இந்தியா தி்ட்டம் முழுமையாக இந்த துறையை சார்ந்துதான் உள்ளது. 3 நிறுவனங்களும், ஒரு அரசு நிறுவனமும்தான் தேவை என மத்திய அரசு பகிரங்களாகவே கூறுகிறது. நாங்கள் (தொலைத்தொடர்பு துறை) மத்திய அரசிடம் இருந்து நிறையவே எதிர்பார்க்கிறோம். ஏனெனில், இந்த துறை உயிர்ப்புடன் இருக்க மத்திய அரசின் உதவி கண்டிப்பாக தேவை. ஆனால், அப்படி எதுவும் உதவி கிடைக்காவிட்டால், அது வோடபோன் ஐடியாவின் கதையை முடிப்பதாக இருக்கும் என்றார். எந்த வகையான உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, ‘‘எங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே ஏஜிஆர் (சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்) தான். இது நீதிமன்றத்தின் வசம் உள்ளது. இருப்பினும் மத்திய அரசு நினைத்தால் பேச்சவார்த்தை மூலம் இதற்கு தீர்வுகாணலாம். ஏனெனில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இந்த வழக்கை போட்டதே அரசுதான்’’ என்றார்.

Related Stories: