5 சதவீதமாக குறைப்பு பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கி அதிர்ச்சி: கடன் வட்டி மாற்றமில்லை

மும்பை: நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இந்த மாதம் நடந்த 5வது சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார். இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை மொத்தம் 1.35 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இந்த முறையும் வட்டி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால், ரெப்போ வட்டி 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதமாகவும் நீடிக்கிறது.பொருளாதார வளர்ச்சி குறியீடாக கருதப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என கடந்த அக்டோபரில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ஆனால், இதை மேலும் குறைத்து 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ஏற்கெனவே மதிப்பீடு செய்ததை விட பொருளாதார வளர்ச்சியை குறைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நடப்பு நிதியாண்டின் 2ம் அரையாண்டில் பண வீக்கம் 5.1 சதவீதம் முதல் 4.7 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட அதிகம். கடந்த 3ம் தேதிப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு 45,170 கோடி டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறுகையில், ‘‘ஒவ்வொரு முறையும் வட்டியை குறைத்துக் கொண்டே இருக்க முடியாது. இதுவரை வட்டி 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் 0.44 சதவீத வட்டி குறைப்பை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளன. பிப்ரவரியில் வட்டி குறைப்பு பற்றி பரிசீலிக்கப்படும்’’ என்றார்.ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 1.35 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால், வங்கிகள்  கடன் வட்டியை 0.44 சதவீதம் மட்டுமே குறைத்துள்ளன.

Related Stories: