இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே பாக். உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம்: அந்நாட்டு அமைச்சர் ஹமத் அசார் பேச்சு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே பாகிஸ்தானில் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம் என அந்நாட்டு அமைச்சர் ஹமத் அசார் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து,  அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இந்த  விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த 16-ம் தேதி ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

அதன்படி, நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை  நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு  தெரிவித்தன. இதனால் இப்பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி  தோல்வியடைந்தது. இதனிடையே பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை துண்டித்தது. இதன் காரணமாக இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டனர்.

இதனால் பாகிஸ்தானில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பாக்.,மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் இது தொடர்பாக பாக்., பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் ஹமத் கூறுகையில்; பருவநிலை மற்றும் இடைத்தரகர்கள் காய்கறிகளை பதுக்கி வைப்பதும் விலை உயர்வுக்கு காரணம். மேலும் நாட்டில் நிலவிவரும் உணவு பொருட்கள் மீதான விலை உயர்வுக்கு இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே முக்கிய காரணம்.

விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி,-பிப்ரவரி மாதங்களில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: