வருவாய் குறைவதால் முடிவு ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: ஜிஎஸ்டியில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு பிரிவுகளாக வரிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சேவை வரி 18 சதவீதத்தில் உள்ளது. ஆடம்பர மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 28 சதவீத வரி பிரிவில் உள்ளன. மாதாந்திர ஜிஎஸ்டி வசூலை 1 லட்சம் கோடிக்கு மேல் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதுவரை 8 மாதங்கள் மட்டுமே வரி வசூல் இலக்கை தாண்டியுள்ளது. வசூல் குறைந்ததால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. 38,000 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. இந்த நிலுவை ஆண்டு இறுதியில் 90,000 கோடியாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜிஎஸ்டி வருவாய் 2017ல் 14.4 சதவீதமாக இருந்தது. இது தற்போது 11.6 சதவீதமாக குறைந்து விட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 அதாவது ஆண்டுக்கு 2 லட்சம் கோடி வருவாய் குறைந்துள்ளது. வரி வசூல் குறைந்ததற்கு, பல்வேறு பொருட்களின் வரியை குறைத்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. எனவே, சில பொருட்கள், சேவைகளின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. வரி விதிப்பு தொடர்பாக இந்த மாத இறுதியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: