கோஹ்லியை பார்த்து பயப்படக் கூடாது... பயிற்சியாளர் சிம்மன்ஸ் சொல்கிறார்

ஐதராபாத்: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை பார்த்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் பயப்படக் கூடாது என்று அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிரமாக பயிற்சி செய்தனர். இந்திய அணியை எதிர்கொள்வதில் உள்ள சவால் குறித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சிம்மன்ஸ் கூறியதாவது: விராத் கோஹ்லி விக்கெட்டை வீழ்த்துவது மிகக் கடினம் என்பதை எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டுமானால் ஸ்டம்ப்பை வைத்து பேட் செய்யச் சொல்லலாம் அல்லது அவருக்கு 100 ரன் கொடுத்துவிட்டு மற்ற வீரர்களுக்கு மட்டும் பந்துவீசலாம். ஒரே சமயத்தில் இரண்டு பேர் பந்துவீசுவதும் கை கொடுக்கும். ஆனாலும் விக்கெட் எடுக்க முடியுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. மொத்தத்தில் எங்கள் பவுலர்கள் கோஹ்லியை பார்த்து பயப்படக் கூடாது. கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது சில டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினோம். அவற்றில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எங்கள் வீரர்கள் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், இந்திய அணியை எதிர்கொள்வது எப்போதுமே சவாலானது தான்.

இவ்வாறு சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

Related Stories: