விளைச்சல் பாதிப்பால் தொடர்ந்து வெங்காயம் விலை உயர்வு; கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.140 முதல் 180 வரை விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100லிருந்து ரூ.130ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காய லாரிகளின் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வழக்கமாக 100 லாரிகளில் 20 டன் வெங்காயம் வரும் நிலையில் தற்போது 35 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.45 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100லிருந்து ரூ.130ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140லிருந்து ரூ.180ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளின் கையிருப்பு அளவை பாதியாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சில்லரை வியாபாரிகள் கையில் வைத்திருப்பதற்கான வெங்காய இருப்பு அளவு 10 டன்னில் இருந்து 5 டன்களாகவும், மொத்த விலை வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவு 50 டன்களில் இருந்து 25 டன்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கையிருப்பு அளவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: