துப்புரவு பணியாளர்கள் இல்லாத நாடு!

ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக்கும் முதல் விஷயம் அதன் தூய்மைதான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஜப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டியது, ‘நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி’ என்பதைத்தான். டோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி.

வகுப்பு முடிய பத்து நிமிடங்கள் இருந்தன. அதற்குள்ளேயே பாடத்தை நிறுத்திய ஆசிரியர், ‘‘நாளைக்கான பட்டியல் இதோ... முதல் மற்றும் இரண்டாம் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மற்றும் நான்காம் பெஞ்சில் இருப்பவர்கள் பள்ளியின் தாழ்வாரம் மற்றும் மாடிப்படிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

ஐந்தாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆறாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் பள்ளியைச் சுற்றியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்...’’ என்று மாணவர்களுக்கு சுகாதார வேலையைப் பகிர்கிறார்.மாணவர்களும் ஆசிரியர் சொன்னதற்கு மகிழ்ச்சியாகத் தலையாட்டுகின்றனர்.

இந்தச் சுகாதார வேலையை ஜப்பானில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் விருப்பத்துடன் செய்கிறார்கள். தவிர, ஒவ்வொரு பள்ளியின் வகுப்பறைக்குள்ளேயே ஒரு அலமாரி இருக்கும். அதில் சுத்தம் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பள்ளியை மட்டுமல்ல, தெருக்கள், சாலைகள் என தங்களுக்குப் பக்கத்தில் உள்ள இடங்களைக் கூட குழுவாக இணைந்து தூய்மை செய்கின்றனர் ஜப்பானிய குழந்தைகள்.

இப்படி, தான் இருக்குமிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைப் பருவத்திலேயே அங்கு விதைக்கப்படுகிறது. இந்தப் பாடத்தை வயதானாலும் ஜப்பானியர்கள் மறப்பதில்லை. அதனால்தான் அந்நாட்டுத் தெருக்களில் ஒரு குப்பையைக் கூட பார்க்க முடிவதில்லை. குப்பை இருந்தால்தானே குப்பைத்தொட்டி வேண்டும்? ஸோ, ஜப்பானிய தெருக்களில் குப்பைத்தொட்டியும் இருக்காது, துப்புரவுத் தொழிலாளியும் இருக்க மாட்டார்!

Related Stories: