மைசூரு திருமண மண்டபத்தில் கத்தியால் குத்தப்பட்டார் காங்கிரஸ் எம்எல்ஏவை கொல்ல முயற்சி : வாலிபர் கைது, பரபரப்பு வாக்குமூலம்

மைசூரு: மைசூரு திருமண மண்டபத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான தன்வீர் சேட்டை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை கத்தியால்  குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட். இவர் மைசூரு பன்னிமண்டப விளையாட்டு மைதானத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். மணமக்களை வாழ்த்திவிட்டு விருந்து சாப்பிட்ட பின்னர் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் அமர்ந்து தனது நண்பர்களுடன் தன்வீர் சேட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் நேராக தன்வீர் சேட் அமர்ந்து இருந்த பகுதிக்கு வந்து திடீர் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் தன்வீர் சேட் மீது பாய்ந்து அவருடைய கழுத்து பகுதியில் ஆவேசமாக குத்தினார்.

தன்வீர் சேட்டின் கழுத்து பகுதியில் கத்தி ஆழமாக பாய்ந்தது. அங்கிருந்து ரத்தம் பீறிட்டு கிளம்பியது. அவர் வலி தாங்காமல் அலறி துடித்தபடி நாற்காலியில் சாய்ந்தார். உடனடியாக அவரை தாங்கி பிடித்த நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘தன்வீர் சேட்டின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதயத்தையும், கழுத்து பகுதியையும் இணைக்கும் முக்கியமான நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்காக தன்வீர் சேட்டுக்கு அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆபரேஷனுக்கு பின்னர் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர். இதற்கிடையே தன்வீர் சேட்டை கொல்ல முயன்ற வாலிபர் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் அருகில் இருந்த தன்வீர் சேட் ஆதரவாளர்கள் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து உதயகிரி மண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கைதான வாலிபர் பெயர் பாரன் (24) என்றும், கவுசியா நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசில் கொடுத்துள்ள  வாக்குமூலத்தில், ‘‘தன்வீர் சேட்டிடம் சில வேலைகளை செய்து கொடுக்கும்படி கூறினேன். ஆனால் அவர் எதுவும் செய்து கொடுக்கவில்லை. அதேபோல சமூக பணிகளையும் அவர் செய்யவில்லை. இதுகுறித்து அவரிடம் பலமுறை தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தினேன்’’ என்று கூறி இருப்பதாக தெரிகிறது. தன்வீர் சேட் மீது நடந்த தாக்குதலுக்கு வாலிபர் சொல்லும் காரணம் உண்மைதானா அல்லது வேறு காரணம் எதேனும் உண்டா என்பது குறித்தும், இந்த கத்திக்குத்து சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஐந்தாவது முறை தாக்குதல்

தன்வீர் சேட்டை கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்திருப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே நான்கு முறை அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. இப்போது 5வது முறையாக அவரை கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: