சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் : கடந்த ஆண்டை விட ரூ.1.28 கோடி அதிகம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மண்டல பூஜை வருமானத்தை விட ரூ.1.28 கோடி அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் குறைவால் வருமானம் குறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் வரலாறு காணாத வகையில் சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் கெடுபிடி மற்றும் போராட்டங்கள் காரணமாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டு வெகுவாக குறைந்தது.ஆதலால் கடந்த மண்டல, மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால். வருமானமும் வெகுவாக குறைந்தது.

ஆனால் தற்போதைய சூழல் மிகவும் அமைதியாக உள்ளதாகவும், பக்தர்களுக்கு எந்த கட்டுபாடுகளும் விதிகப்படவில்லை என்பதால் இந்த ஆண்டு சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம்

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மண்டல பூஜை வருமானத்தை விட ரூ.1.28 கோடி அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் உண்டியல் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் கடந்த 2017ம் ஆண்டை காட்டிலும் ரூ. 25 லட்சம் அதிகமாக கிடைத்துள்ளது. அதே போல சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை, அப்பம் மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகரித்துள்ளது.

Related Stories: