டெல்லி குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லி குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை என்றும் அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பிஐஎஸ் செய்த 11 சோதனைகளில் 10-ல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் தற்போது டெல்லியில் அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேட்டியளித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள். டெல்லி குடிநீர் மிகமோசமாக இருப்பதாக கூறி மக்களிடம் பீதியை கிளப்புகிறார்கள். டெல்லி குடிநீர் குறித்து குடிநீர் வாரியம் ஏற்கெனவே சோதனை செய்துள்ளது. பல பகுதிகளில் உள்ள மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் 1.5 சதவீதம் அளவுக்கே தண்ணீர் மாசு இருப்பதாக தெரியவந்தது.

இவர்கள் வெறும் 11 மாதிரிகளை வைத்துக் கொண்டு டெல்லி தண்ணீர் பற்றி மக்களிடம் பீதி கிளப்புகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளை விடவும் இங்கு தண்ணீர் மோசமானதாக இல்லை. இதனை மத்திய அமைச்சர்களான கஜேந்திர சவுகான், ஹர்ஷ வர்த்தன், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புரிந்து கொள்ள வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories: