கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்

தஞ்சை : கார்த்திகை தீப திருநாளையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கார்த்திகை தீப திருநாள் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் அகல் தீபங்கள் ஏற்றி வழிபடுவர். முருக பெருமானுக்கு உகந்த திருநாளாக கருதப்படும் இந்த நன்னாளில் தமிழர்கள் தங்களுடைய இல்லங்களில் அகல் தீபத்தை ஏற்றி ஒளி வீச செய்து கடவுளை நம் இல்லத்துக்கு வரவேற்பர்.

இதையொட்டி தஞ்சை பகுதியில் தற்போது பலவிதமான அகல் தீபங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.கார்த்திகையையொட்டி அகல் தீபங்கள், அணையா விளக்கு, யானை மேல் விளக்கு, அம்பாரி விளக்கு, திருஷ்டி விளக்கு, மீன் விளக்கு, அன்னகாமாட்சி விளக்கு, ஆடுமேல் விளக்கு, பொய்க்கால் குதிரை விளக்கு, மான்கொம்பு விளக்கு, குத்துவிளக்கு, நல்ல விளக்கு, காமாட்சி விளக்கு, நந்தி விளக்கு, அரண்மனை விளக்கு, அம்மன் விளக்கு, சர விளக்கு என 25 வகையான விளக்குகளை மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கின்றனர். இந்த விளக்குகள் 5 ரூபாயிலிருந்து துவங்கி ரூ.1,500 வரை விற்பனைக்கு தயாராகி வருகிறது.

இந்த விளக்குகள் தஞ்சை, மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி, சுவாமிமலை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படுகிறது. தமிழக அரசு அனுமதியின்றி மண் எடுக்கக்கூடாது என தடை விதித்துள்ளதால் அகல் தீபம் தயாரிப்பதற்கு தற்போது போதிய மண் கிடைக்கவில்லை. இதனால் அதிகளவில் விளக்கு செய்வதற்கு முடியாத நிலையில் தற்போது மெழுகால் தயார் செய்யப்பட்ட விளக்குகள் வந்து விட்டதால் களிமண்ணாலான விளக்குகள் வி்ற்பனை மந்தமாகியுள்ளது. எனவே மெழுகால் விற்பனை செய்யப்படும் விளக்குகளை தடை செய்து விட்டு களிமண்ணாலான விளக்குகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: