தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (19ம் தேதி) மற்றும் 20ம் தேதி ஆகிய இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சிவகிரி, பாபநாசம் தென்காசி, நாகை மாவட்டம் அணைக்காரன் சத்திரம் மற்றும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு, பாளையங்கோட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ராமேஸ்வரம், காரைக்கால் மற்றும் வாட்ராப் பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: