உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சரத் அரவிந்த் பாப்டே!!

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.    

எஸ்.ஏ.பாப்டே பின்னணி:

*உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்றார்.

*நீதிபதி பாப்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் வக்கீல் குடும்பம். தந்தை அரவிந்த சீனிவாஸ் பாப்டே பிரபல வக்கீல். நீதிபதி பாப்டே, நாக்பூர் பல்கலைக் கழகத்தில் எல்எல்பி சட்டப் படிப்பை முடித்தார்.  

*மகாராஷ்டிரா வக்கீல் சங்கத்தில் இவர் கடந்த 1978ம் ஆண்டு பதிவு செய்தார். மும்பை உயர்நீ திமன்றத்தின் நாக்பூர் அமர்வில் இவர் வக்கீலாக 21 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். கடந்த 2000ம் ஆண்டு இவர் மும்பை உயர் நீதிமன்ற  நீதிபதிானார்.

*2012ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

*இவரை அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்தார். அதை ஏற்று இவரை 47வது தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

*அயோத்தி  வழக்கு தீர்ப்பு, ஆதார் வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்தார். முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அமர்விற்கு பாப்டே தலைமை வகித்தார். இந்த வழக்கில் கோகாய் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

*உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 17 மாதங்கள் பதவியில் இருக்கப் போகும் இவர், 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஓய்வு பெறுவார்.

Related Stories: