ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு உடனடி விசா: விமான நிலையத்தில் வழங்கும் திட்டத்தை நீட்டித்தது மத்திய அரசு

டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை மற்றும் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள  சுற்றுலா தளங்களுக்கு கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா செல்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு உடனடியாக விமான நிலையத்திலேயே விசா வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த விசா 60 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் சுற்றுலா,  இருநாட்டு மக்களிடையே நல்லுறவு மற்றும் வர்த்தக நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களில் இந்த வசதி  அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முறைப்படி முன்பு விசா பெற்ற பயணிகளுக்கும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விசா பெற்ற பயணிகளுக்கும் இச்சலுகை வழங்கப்படுகிறது.

எடை அதிகரிப்பு:

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஜிலை மாதம் முதல் புதிதாக  தொடங்கியது. இந்த புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், விமான சேவையை பார்வையிட அமீரகம் வந்திருந்த ஏர் இந்தியா  விமான நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வானி லோகனி இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவரிடம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி அளிக்கவேண்டும் என அமீரகம் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள்  விடுத்தனர். இந்தியர்களின் வேண்டுகோளையத்து பேசிய அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார். ஏற்கனவே 30  கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: