தொலைத்தொடர்பு ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறையுமா?

புதுடெல்லி: தொலைத்தொடர்பு சேவைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளதாக, ஜிஎஸ்டி கவுன்சில் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளன. குறிப்பாக, ஜியோ இலவச சேவைக்கு பிறகு பெரும்பாலான  தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் பெருமளவு சரிந்தது. சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவன வருவாய் கடந்த காலாண்டில்  50,922  கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது, இந்திய பெரு நிறுவனங்கள் சந்தித்திராத மிகப்பெரிய நஷ்டமாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் உயர ஜிஎஸ்டியும் ஒரு காரணமாக அமைந்தது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஜிஎஸ்டி  18 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்பு சேவை வரி 15 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் சரிந்து  வருவதை கருத்தில் கொண்டு வரியை 12 சதவீதமாக குறைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. மொத்த வருவாயில் ஏறக்குறைய 30 சதவீதம் வரிக்கே  சென்று விடுகிறது என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, வரியை குறைப்பது தொடர்பான இந்த கோரிக்கை தற்போது  ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள வருமான வரி அதிகாரிகள் குழுவின் பரிசீலனையில் உள்ளதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு  எடுக்கப்படலாம் எனவும் ஜிஎஸ்டி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: