உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சியினர் சட்டையை கிழி வீட்டை அடித்து நொறுக்கு: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு

திருவில்லிபுத்தூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற, அனைத்து சித்து விளையாட்டுகளையும் விளையாடுவேன், எதிர்க்கட்சியினர் சட்டையைக் கிழி, வீட்டை அடித்து நொறுக்கு  என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:அதிமுகவில் முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் இருவரது புகழையும் பேசக் கூடியவர்களுக்கு வாழ்வு உண்டு; வசதி, வாய்ப்புகள் உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற, அனைத்து சித்து  விளையாட்டுகளையும் விளையாடுவேன். தேர்தல் நேரத்தில்  அதிமுகவினரின் சட்டையை தொட்டால், எதிர்க்கட்சியினரின் சட்டையை கிழிக்கவேண்டும். நம் வீட்டுக் கதவை  தட்டினால், எதிர்க்கட்சியினரின் வீட்டுக் கதவை நாம் உடைத்து  நொறுக்க வேண்டும். இதுதான் நமது கொள்கை. அடுத்து எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். 16 வயது முதல் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வருகிறேன். அதைப்பற்றி கவலை இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா, என்னை வழி  நடத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

வசதியில்லையா? அப்போ சீட் இல்லை...

திருவில்லிப்புத்தூர் அருகே, மல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் தற்போது இணைந்துள்ளனர். எங்களுக்குள் சகோதரச் சண்டை  மட்டுமே நடந்துள்ளது. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இதனால், உட்கட்சி சண்டை இருக்கத்தான் செய்யும். வசதி வாய்ப்பில்லாதவர்கள், வயதானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க முடியாது. இது  கம்ப்யூட்டர் காலம். அதனால், இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு கொடுங்கள்’’ என்றார்.

Related Stories: