அமைச்சர் முன்னிலையில் அரசை விமர்சித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ: நாகை கூட்டுறவு வாரவிழாவில் சர்ச்சை

நாகை: நாகையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் அரசை விமர்சனம் செய்தும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளை அதிமுக எம்எல்ஏ திட்டித்தீர்த்ததும் அதிகாரிகள் மத்தியில் சர்ச்சை  ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் சார்பில் 66-வது கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் கூட்டுறவு வார விழா நேற்று நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில்  மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் கலெக்டர் பிரவீன் நாயர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  அப்போது பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் பேசியபோது, கூட்டுறவு சங்க  அதிகாரிகள் யாரும் முறையாக செயல்படுவதில்லை. நான் சொன்ன எதையும் அதிகாரிகள் செய்யவில்லை. ஒரு வருடமாகியும் மக்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் இருந்து இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.

இது தவறான நடவடிக்கை என அதிகாரிகளை மேடையிலேயே எச்சரித்தார். இதுவரை கூட்டுறவு துறை சார்பாக ஒரு அரசு ஆணைகூட தனது தொகுதியில் வழங்கவில்லை. இதனால் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று  கூட்டுறவுத்துறை அதிகாரிகளை சரமாரியாக திட்டி 10 நிமிடம் பேசினார்.  அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையிலேயே அரசையும், அதிகாரிகளையும் எம்எல்ஏ, விமர்சித்து பேசியது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் கட்சியினர் மத்தியில் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: