அதிமுக அரசின் செயல்களை முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி

சென்னை: அதிமுக அரசின் செயல்களை எல்லாம் முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.உள்ளாட்சி தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், வெல்லபிரசாத், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர்,  சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார் எம்பி, பொருளாளர் நா.சே.ராமச்சந்திரன், நடிகை குஷ்பு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது,  எவ்வளவு இடங்களை கூட்டணியில் கேட்டு பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி அளித்த பேட்டி:

வருகிற 30ம் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.இந்த பேரணியில் தமிழகத்தில் இருந்து சுமார் 5000 பேர் கலந்து கொள்கின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசுக்கு சாதகமாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். இதை எல்லாம் தாண்டி வெற்றிப்பெறுவதற்காக வழிகள் என்ன  என்பது குறித்து ஆலோசனை செய்வோம்.ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப் உயிரிழப்பை ஒரு செய்தியாக பார்க்கக்கூடாது. ஐஐடியில் 12 மாணவர்கள் மரணம் அடைந்துள்ளனர். மாணவர்களின் மரணத்துக்கு என்ன காரணம். சாதி, மதம் பின்புலம் ஏதாவது இருக்கிறதா? என்பது குறித்து  விசாரணை மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி தேர்தல் என்பதால், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர்களிடம் அறிவுரை கூறியுள்ளோம். எந்த இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் உள்ளது என ஆய்வு செய்த பிறகு, யாரை வேட்பாளராக  நிறுத்தலாம் என்று ஆலோசிப்போம். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் தேர்தலை சந்திக்க தமிழக காங்கிரசும் தயாராக இருக்கிறது. ஜெயலலிதா கூட மாநில உரிமைக்காக போராடினார். ஆனால் இப்போதுள்ள அதிமுக அரசு மாநில உரிமைகளுக்கு போராடுவதை மறந்து விட்டது. தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டி கொள்ள கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை  எதிர்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: