சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராகி வருகிறது. இரண்டு கட்சிகளிலும்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் விருப்ப மனு வினியோகத்தை  தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு பின்னடைவு இந்த உள்ளாட்சி தேர்தலில் வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் மக்களை கவரும் வகையில் ஆளும் அதிமுக புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் 3 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்  கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி சுற்றுப்பயணம் சென்றார். இதன்மூலம் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி புதிய தொழில்  நிறுவனங்களுக்கு அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக அமைச்சரவையின் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 19ம் தேதி(நாளை) காலை 11 மணிக்கு  சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய துறைகளின்  செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று பொதுமக்களை கவரும்  வகையில் புதிய திட்டங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவைகளுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது என்று கூறப்படுகிறது.இதனால், நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிந்த ஒரு வாரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பும் வெளியாகும் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

Related Stories: