மத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங். பிரமாண்ட பேரணி : 30ம் தேதி நடக்கிறது

புதுடெல்லி: பாஜ தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளைக்  கண்டித்து, பாரதத்தை காப்பாற்றுங்கள் பேரணி’ என்ற பேரணியை வரும் 30ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் நடத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வேலையின்மை நிலவுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை கண்டித்து கடந்த 5ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும், மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதன் முடிவாக, டெல்லியில் வரும் 30ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள், அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், சட்டமன்ற குழு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.  இதில் தமிழகத்தின் சார்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘பாஜ தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்து கூறும் வகையில் கடந்த 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் முடிவாக, 30ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் உச்சக்கட்ட போராட்டம் நடைபெறும்.  இதற்கு பாரதத்தை காப்பாற்றுங்கள் பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி

கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் பொருளாதாரம், சுதந்திரம் மற்றும் மக்களிடையே ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்தாமல் தவறான ஆட்சியை செய்யும் பிரதமர் நரேந்திர மோடியை திரும்பிப்போ என்று தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் 30ம் தேதி பேரணி நடத்தப்படுகிறது. மேலும், மாநில அரசியல் நிலவரம் பற்றியும் இன்றயை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,’’ என்றார்.

Related Stories: