மத்திய நிதியமைச்சர் தகவல்: வங்கி டெபாசிட்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு

புதுடெல்லி:  வங்கிகளில் வாடிக்கையாளர் செய்யும் டெபாசிட்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கும் வசதியை விரிவுபடுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.மத்திய நிதியமைச்சர் கூறியதாவது: “வங்கிகளில் தற்போது டெபாசிட் செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு இன்சூரன் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு  விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய திட்டத்தை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பேன். அமைச்சரை ஒப்புதல் அளித்தால், அடுத்தாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்ட மசோதா தாக்கல்  செய்யப்படும்”

எந்த அளவிலான டெபாசிட் தொகைகளுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. வங்கிகள் நிதி இழப்பை சந்திக்கும்போது, வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்  என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வங்கிகளில் டெபாசிட் சொய்யப்படும் தொகைக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு முதல் முறையாக கடந்த 1993ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ₹30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு மட்டும்  இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுவறவு வங்கி (பிஎம்சி) பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. வங்கியின் நிர்வாக குளறுபடியால் வாராக்கடன் சுமை அதிகரித்து திவலாகும் நிலையை அடைந்தது.  இதையடுத்து ரிசர்வ் வங்கி உடனடியாக தலையிட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. புதிய கடன்கள் மற்றும் பழைய கடன்களை கால நீடிப்பு செய்தல், பிற தொழில்களில் டெபாசிட் செய்தல் போன்றவற்றை முன் அனுமதிபெறாமல்  செய்வதற்கு தடை விதித்தது மேலும் வாடிக்கையாளர் வங்கியில் இருந்து பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதித்தது. இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவே இன்சூரன்ஸ் வசதியை செய்ய அரசு முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2வது காலாண்டில் ‘நிலைமை முன்னேறும்’

கடந்த செப்டம்பர் மாதம் பெரிய நிறுவனங்களுக்கான வரி கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால், புதிய முதலீடுகள் செய்வது குறித்து நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. நிதியாண்டின் 2வது காலாண்டில் நிலைமையில் முன்னேற்றம்  ஏற்படும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். பொருளாதார மந்த நிலை அப்படியே தொடரும் என்று நினைக்கக் கூடாது. புதிய முதலீடுகள் வரத்தால் நிலைமையில் மாற்றம் ஏற்படும். இதற்கு சிறிது காலம் ஆகும். அதன்படி நிதியாண்டின் 2வது காலாண்டில் நிலைமையில் முன்னேற்றம்  ஏற்படும் என்று நம்புகிறோம். இந்த மாத இறுதியில் ஜிடிபி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருளாதார மந்த நிலையை போக்கி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  இருந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: