வரிவசூல் நிர்ப்பந்தம் 22 அதிகாரிகள் விலக திட்டம்

மும்பை : கொல்கத்தா: பொருளாதார மந்தநிலை காரணமாக அனைத்து தொழில் துறைகளும் பாதி்கப்பட்டுள்ளன. இதனால் அரசின் வருவாயும் குறைந்துவிட்டது. இந்நிலையில் வரி வருவாயை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிதியாண்டில் நேரடி வரி வருவாய் வசூலை 17 சதவீதம் அதிகரிக்க வரிகள் துறை அதிகாரிகளுக்கு அரசு நிர்பந்தம் கொடுத்துள்ளது. சமீபத்தில் பொருளாதாரத்தை சீர்படுத்தும் வகையில் மூதலீடுகளை ஈர்ப்பதற்காக பெரிய நிறுவனங்களுக்கான வரியில் கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால் நேரடி வரி வருவாய் குறைந்துவிட்டது. இதை ஈடு செய்யும் வகையில் வரி வசூல் இலக்கை சாத்தியமில்லாத அளவுக்கு இலக்கு நிர்ணயித்து வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

இதையடுத்து, இந்த மாதிரியான அழுத்தமான சூழ்நிலையில் தங்களால் பணியாற்ற இயலாது என்பதால், இந்த நிதியாண்டில் வரிகள் துறையைச் சேர்ந்த 22 உயர் அதிகாரிகள் விருப்ப ஓய்வில் செல்ல முடிவு செய்து அதற்கான விண்ணப்பத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். கடந்த 2018 நிதியாண்டில் இதுபோன்று 34 அதிகாரிகள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். வரிகள் துறையில் இதுபோன்ற அசாதார நிலை நிலவுகிறது என்பது வருமான வரி அரசிதழ்பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கர் பட்டாச்சார்யா வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

வரி வசூல் இலக்கு நிர்ணயம் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் மற்றும் விருப்பஓய்வில் செல்ல அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளது இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் இருந்து எந்தபதிலும் இல்லை. கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது பலவீனமாகத்தான் இருக்கிறது. வளர்ச்சி என்பது 5 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு காரணம், அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது பிரதமர் மோடியின் அலுவலகத்தில்தான் குவிந்துள்ளது. ஆக்கப்பூர்வமான விவாதம், ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை. இதுவே தவறான / காலத்திற்கு ஒவ்வாத கொள்கை முடிவுகளை எடுக்க வழிவகை செய்துவிட்டது என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: