நாள்தோறும் ஓடுவதால் நீடிக்கும் ஆயுட்காலம்: ஆய்வாளர்கள் தகவல்

ஆஸ்திரேலியாவில் நாள்தோறும் ஓடுபவர்களின் எண்ணிக்கையானது 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரண்டு மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1.35 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் இதனைப் பின்பற்றி வருகின்றனர். இது மொத்த சனத்தொகையில் 7.4 சதவீதமாகும். இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது 230,000 நபர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வு முடிவாகும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஓடுவதால் உடற்பருமன் குறைதல், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வருதல், கொலஸ்ரோலின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வருதல், இரண்டாம் வகை நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுதல், இருதய நோய் மற்றும் புற்றுநோய் என்பன தவிர்க்கப்படுதல் என்பன நடைபெறுவதாக கண்டறியப்பட்டிருந்தது. தற்போது இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது 230,000 நபர்களில் 10 சதவீதமானவர்கள் நாளாந்தம் ஓடும் பயிற்சியை மேற்கொள்பவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் 5.5 வருடங்கள் தொடக்கம் 35 வருடங்கள் வரை கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனர். எனினும் இவ் ஆய்வுக் காலப் பகுதியில் சுமார் 25,951 பேர் மரணமடைந்திருந்தனர். ஆய்வின் முடிவில் ஓடுபவர்களை ஓடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மரணமடையும் வாய்ப்பு 27 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக இதய நோயினால் மரணமடையும் ஆபத்து 30 சதவீதத்தினாலும், புற்றுநோயினால் மரணமடையும் ஆபத்து 23 சதவீதத்தினாலும் குறைவடைந்திருக்க காணப்பட்டது. வாரத்தில் ஒரு தடவையாவது 50 நிமிடங்கள் வரை ஓடுபவர்களில் கூட விரைவில் மரணம் அடையும் ஆபத்து குறைவடைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவேளை ஓடும்போது வேகமானது மணிக்கும் 8 கிலோ மீற்றர்கள் தொடக்கம் 13 கிலோ மீற்றர்களுக்கு இடையில் இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: