தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக துவங்கப்பட்ட 59 பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம் எப்போது? கவுன்சலிங் விண்ணப்பம் பெற்றதை மறந்து போன அதிகாரிகள்

சிறப்பு செய்தி

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 59 புதிய பாடப்பிரிவுகள் துவங்கியும் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இடமாறுதல் கலந்தாய்வுக்கு விருப்பமனு பெற்று 40 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை தேதி கூட அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் 113 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு 2001 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் வழக்கமாக ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு சற்று தாமதமாக செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கு இடமாறுதல் கவுன்சலிங் குறித்த அறிவிப்பு கடந்த செப்டம்பர் 20ம் தேதி தான் வெளியானது. இடமாறுதலுக்கு விருப்பம், தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என 6 நாள் அவகாசம் தரப்பட்டது.  

உடனடியாக பல அரசு கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பித்தனர். எப்போதும் மாறுதல் விருப்ப மனு பெறும் போது கவுன்சலிங் தேதியும் அறிவிக்கப்படும். ஆனால் கடந்த செப்டம்பர் 20ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கவுன்சலிங் எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. விண்ணப்பித்தவர்கள் கவுன்சலிங் தேதி அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விண்ணப்பித்து சுமார் 40 நாள் கடந்த பின்னரும் கவுன்சலிங் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இடைப்பட்ட நாட்களில் நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் இடமாறுதல் உத்தரவுகள் மட்டும் வழங்கப்பட்டு

வருகிறது

.

இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 59 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு போதிய தகுதியான உதவி பேராசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் வேறு கல்லூரிகளில் இருந்து கலந்தாய்வு மூலமாவது பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதனால் 59 புதிய பாடப்பிரிவுகளுக்கும் தற்போது பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியின் மூலம் ெசாற்ப ஊதியத்தில் தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமித்து சமாளிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் ஒரு செமஸ்டர் கடந்து விட்ட நிலையில் விரைவில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதுடன், கலந்தாய்வையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: