எதிர்மறையான எண்ணங்களுக்கு புதிய இந்தியாவில் இடமில்லை: பிரதமர் மோடி உரை

அயோத்தி தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது:பல நூறு ஆண்டுகாலமாக நடந்த முக்கியமான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை சமூகத்தின் அனைத்து பிரிவினரும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது, இந்தியாவின் பழங்கால  பாரம்பரியமான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையின் நம்பிக்கை இன்று முழுமையாக வெளிப்பட்டுள்ளது.இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்றைய நாள் பொன்னான அத்தியாயமாகும். நவம்பர் 9, இதே தினத்தில் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு சமூகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் திறந்து  வைக்கப்பட்டுள்ளது. அதோடு அயோத்தி தீர்ப்பும் வெளியாகி, ஒன்றுபட்டு வாழ்வோம், ஒன்றிணைந்து முன்னேறுவோம் என்ற செய்தியை நமக்கு தந்துள்ளது. அனைத்து கசப்புணர்வுகளும் நீக்கப்பட்டுள்ள நன்னாள் இது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லுறவு அவசியமாகும். அயோத்தி தீர்ப்பை நாம் அனைவரும் ஏற்றுள்ளது இந்தியாவின் சகிப்புத்தன்மையை உணர்த்துகிறது. புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கும்,  கசப்புணர்வுகளுக்கும், அச்சங்களுக்கும் இடமில்லை. நம் தேசத்தை வலுவாக கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:ராம் பக்தியாக இருந்தாலும், ரகீம் பக்தியாக இருந்தாலும் சரி, நாம் தேச பக்தியைத்தான் வலுப்படுத்த வேண்டும். இந்த தீர்ப்பை யாருக்கும் கிடைத்த வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த  விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி உள்ளது. இன்றைய தீர்ப்பில் 130 கோடி இந்தியர்களும் காட்டும் அமைதி, நாம் அமைதியாக வாழ்வதற்காக இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்த  ஒற்றுமையின் பலம், ஒருங்கிணைப்பின் சக்தி, நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லட்டும். ஒவ்வொரு இந்தியரையும் அதிகாரமிக்கவராக மாற்றட்டும். எந்த பிரச்னையையும் சட்டப்படி சுமூகமாக தீர்க்கலாம் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளதால், இது குறிப்பிடத்தக்க தீர்ப்பு. நமது நீதித்துறையின் சுதந்திரத்தையும், வெளிப்படைத்தன்மையையும், தொலைநோக்கையும் உறுதிபடுத்தியுள்ளது.  நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: