தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு, மர்மக்காய்ச்சல்: சென்னையில் 150 பேர் மர்மக்காய்ச்சலால் பாதிப்பு!

சென்னை: சென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மக்கள் மர்மக்காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். மர்மக்காய்ச்சலுக்கு இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3,500 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். மேலும், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்திய அளவில் கர்நாடக மாநிலத்தில் 25 சதவீதம், ஆந்திர மாநிலத்தில் 15 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 5 சதவீதம் மட்டும் குறைவாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெங்கு காய்ச்சல் தவிர மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோவையில் சிறுமி ஒருவர் மர்மக்காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடியில் மரம் காய்ச்சல் காரணமாக இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, தாராபுரம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மர்மக்காய்ச்சலால் 1,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்து வரும் சூழலில் இது போன்ற டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவுவதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் நோயாளிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: