செல்போன், கஞ்சா பதுக்கலா? கடலூர், புதுக்கோட்டை,மதுரை சிறைச்சாலைகளில் சிறைத்துறை டி.ஐ.ஜி தலைமையில் போலீசார் திடீர் சோதனை

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைக்குள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள செல்போன், கஞ்சா, பீடி  உள்ளிட்ட  பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையிலான 100 போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒவ்வொரு அறையாகச் சென்ற போலீசார், கைதிகள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யட்ட பொருட்கள் பயன்படுத்துகின்றனரா, சிறை வளாகத்தில் அவை பதுக்கிவைக்கப்பட்டுள்ளனவா என சோதனை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட எதுவும் சிக்க வில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை மற்றும் சிறுவர்சீர்திருத்தப்பள்ளிகளில் 200க்கும் விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு உள்ள கைதிகள் செல்போன்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன் படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து இன்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. எனினும் சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மத்திய சிறையில் சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் கைதி நாகராஜிடம் 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகள் செல்போன் பயன்படுத்துகின்றனரா என சோதனை செய்ததில் 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: