உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பாப்டேவை நியமிக்கலாம்: அரசுக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தற்போதைய மூத்த நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதி உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பதவியில் இருக்கும் நீதிபதிகளின் பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தனக்கு அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ள வழக்கம். அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாயின் பதவி காலம் அடுத்த மாதம் அதாவது நவம்பர் 17ம் தேதியோடு முடிய உள்ளது. இதில் முன்னதாக அவர் வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கின் தீர்ப்பை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனக்கு பிறகு புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான ஷரத் அரவிந்த் பாப்டேவை (எஸ்.ஏ.பாப்டே) நியமிக்கலாம் என மத்திய அரசுக்கு  ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளார். இந்த பரிந்துரை விரைவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 47வது புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பார் எனத் தெரிகிறது. அது நடந்தால், அவர் 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார்.

வழக்கறிஞர் பாரம்பரியம்:

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நாக்பூரை சேர்ந்த பரம்பரிய வழக்கறிஞர் குடும்பத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல்.24ம் தேதி பிறந்தவர். இவரது தந்தையான அரவிந்த் பாப்டே 1980ம் ஆண்டு முதல் 1985வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவர். இவரது மூத்த சகோதரரான வினோத் அரவிந்த் பாப்டே உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

Related Stories: