அயோத்தி நில வழக்கில் இருந்து வக்பு வாரியம் வாபஸ் பெறும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: முஸ்லிம் அமைப்புகள் கருத்து

புதுடெல்லி: ‘அயோத்தி நிலப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இந்த வழக்கில் இருந்து சன்னி வக்பு வாரியம் வாபஸ் பெறுவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,’ என இந்த வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அயோத்தி நில வழக்கை கடந்த 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, தீர்ப்பை கடந்த 16ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், அயோத்தி நிலப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அமைக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவும் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘அயோத்தி நில பிரச்னைக்கு தீர்வு காண சன்னி வக்பு வாரியம், நிர்வானி அகதா, நிர்மோகி அகதா, ராம் ஜென்ம பூமி புன்ருத்தர் சமிதி உட்பட இதர இந்து அமைப்புகள் சாதகமாக உள்ளன,’ என கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சமரச திட்டத்தின்படி இந்த வழக்கில் இருந்து வாபஸ் பெறவும் சன்னி வக்பு வாரியம் விருப்பத்துடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரரான சித்திக் என்பவரின் வக்கீல் இஜாஸ் மக்பூல் கூறுகையில், ‘‘சன்னி வக்பு வாரியம் தவிர, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும், நடுவர் குழுவின் சமரச தீர்வை நிராகரித்துள்ளன. ஏனென்றால், நிலப் பிரச்னையில் தொடர்புள்ள முக்கிய இந்து அமைப்புகள், நடுவர் குழுவின் சமசர நடவடிக்கையில் இடம் பெறவில்லை. அயோத்தி வழக்கில் இருந்து சன்னி வக்பு வாரியம் வாபஸ் பெற தயாராக உள்ளது என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,’’ என்றார்.

Related Stories: