அத்துமீறி வீடு புகுந்த வழக்கில் சபாநாயகருக்கு 6 மாதம் சிறை: நீதிபதி அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அத்துமீறி வீடு புகுந்ததாக 2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மாநில சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

கிழக்கு டெல்லியின் விவேக் விகார் காலனியில் உள்ள தனது வீடு ஒன்றில் ராம் நிவாஸ் கோயல் உள்பட அவரது ஆதரவாளர்கள் 5 பேர் 2015ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி (மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்தினம்) இரவு 9.30 மணிக்கு நுழைந்து துவம்சம் செய்தனர் என கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் கட்டுமான உரிமையாளர் மணீஷ் காய் என்பவர் வழக்கு தொடுத்தார். கோயல் உள்ளிட்டோரால் அந்த வீட்டில் தங்கி இருந்த தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் எனவும், வீடு அடித்து நொறுக்கப்பட்டது என்றும் புகாரில் காய் கூறியிருந்தார்.

ஏரியாவில் விநியோகம் செய்வதற்காக மது பாட்டில்கள், கம்பளிகள் உள்பட பல பொருட்களை மணீஷ் பதுக்கி வைத்திருந்தார் என்பதால், அங்கு சோதனைக்கு கோயல் சென்றார் என போலீசார் தங்களது எப்ஐஆரில் குறிப்பிட்டு இருந்தனர். குற்றச்சாட்டை கோயல் தரப்பு அடியோடு மறுத்து நீதிமன்றத்தில் வாதம் நடத்தியது. மேலும், பிசிஆர் வேனுக்கு தகவல் தெரிவித்து உதவி போலீஸ் கமிஷனர், அப்பகுதி காவல்நிலைய அதிகாரி மற்றும் காவலர்களை வரவழைத்து அவர்களது துணையுடன் வீட்டுக்குள் சோதனை நடத்தியதாகவும் கோயல் தரப்பு வாதாடியது. அந்த வழக்கில் விசாரணைகள் 11ம் தேதி முடிவடைந்தது. அதையடுத்து மாநில சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அவரது மகன் சுமித் கோயல் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என மாஜிஸ்திரேட் சமர் விஷால் அதே தினம் தீர்ப்பு அறிவித்து, தண்டனை விவரம் 18ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

அதன்படி தண்டனையை மாஜிஸ்திரேட் நேற்று அறிவித்தார். தண்டனை குறித்து மாஜிஸ்திரேட் கூறியிருப்பதாவது: குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பில் குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 448ன்படி (அத்துமீறி வீடு புகுதல்) குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்கிறேன். குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்க வேண்டியது நியாயமானது. எனவே, சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அவரது மகன் சுமித் கோயல், ஹித்தேஷ் கன்னா, அடுல் குப்தா, பல்பீர் சிங் ஆகிய 5 பேருக்கும் தலா 6 மாதம் சிறைதண்டனை மற்றும் தலா 1,000 அபராதம் செலுத்த வேண்டும். தீர்ப்பு மற்றும்  தண்டனை குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய விரும்பினால், குற்றவாளிகள் சொந்த உத்தரவாதத்தின் பேரில் தலா 1 லட்சம் வைப்பு தொகை செலுத்தி ஜாமீனில் செல்ல அனுமதிக்கிறேன்.

இவ்வாறு தண்டனை குறித்து மாஜிஸ்திரேட் அறிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு நெருக்கத்தில் உள்ள நிலையில், மாநில சபாநாயகருக்கு குற்ற வழக்கில் தண்டனை கிடைத்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு அரசியலில் சறுக்கலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு அடைந்துள்ளன.

Related Stories: