ஜெயலலிதா போலி கைரேகை விவகாரம் சசிகலா, மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு : சிபிஐயிடம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு

சென்னை : திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின்போது விண்ணப்பப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை சட்டத்திற்கு புறம்பாக போலியாக பயன்படுத்த உதவிய சசிகலா மற்றும் மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.சரவணன் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகை உண்மையல்ல; போலியானது என்று திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐகோர்ட் விசாரித்து ,” தேர்தல் படிவத்தில் இருக்கும் ஜெயலலிதா  கைரேகை போலியானது; போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை ஒப்பிட்டு பார்க்க பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் கைரேகை அடங்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஏ.கே.போஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,”ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தடை விதித்ததோடு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து முதலாவதாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஏ.கே.போஸ் மாரடைப்பால் திடீரென காலமானார். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப்பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஒரு புதிய புகார் மனுவை கொடுத்துள்ளார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2016ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகையை முறைகேடாக பெற்று அதை அங்கீகரிக்க உதவியாக இருந்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, மருத்துவர் பாலாஜி,அப்போலோ மருத்துவர்கள் பாபு ,ஆப்ரகாம் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் சட்ட நடைமுறையின் அடிப்படையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிந்து விட்டால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த உண்மையும் கண்டிப்பாக தெரிந்துவிடும் என கொடுக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜெயலலிதாவின் போலி கைரேகை விவகாரத்தில் அதிமுக கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணைத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் எனவும் சரவணன்  தெரிவித்தார்.

Related Stories: