ஜிஎஸ்டி மோசடியில் கைது செய்யப்பட்ட ஈரோடு தொழிலதிபரின் பின்னணியில் தமிழக அமைச்சர்?

பெருந்துறை: 450 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ஈரோடு தொழிலதிபரின்  பின்னணியில் தமிழக அமைச்சர் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. கடந்த 2008ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், நாடு முழுவதும் சாலை அமைத்தல், நீர் தேக்கம் கட்டுதல், வடிகால் அமைப்பு உருவாக்குதல் போன்ற கட்டுமான பணிகள் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் உள்பட பல கட்டுமான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனம் 1,000 கோடிக்கும் மேல் அரசின் திட்டங்களை கான்டிராக்ட் எடுத்து செய்து வந்துள்ளது. இதுதவிர, தண்ணீர் விநியோகம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு என அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும் 10 லட்சம் கோடியில், ஒரு சதவீத ஆர்டரை பெற்றாலே 10,000 கோடி வருவாய் கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் இந்நிறுவனம் பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், விசாகப்பட்டினத்தில் எந்த சேவையும் அளிக்காமல் போலி ஆவணம் தயாரித்தும், பெற்றும் 450 கோடி அளவுக்கு ஜிஎஸ்டியில் மோசடியில் ஈடுபட்டதை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர்.

இதில், போலி ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை இந்த நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியம் அசோக்குமார் ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, பெருந்துறை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பிளோபிக்ஸ் நிறுவனம் மூலம் பைப் தயாரித்து அதை தனது ஒப்பந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக போலி பில் தயாரித்து பணம் பெற்றது உட்பட பல்வேறு புகார் அசோக்குமார் மீது எழுந்துள்ளது. கைதான சுப்பிரமணியம் அசோக்குமார், பெருந்துறை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.பி.பெரியசாமியின் சகோதரி மகன் ஆவார். மேலும், வி.பி.பெரியசாமியின் மூத்த சகோதரரான வி.பி.அருணாசலம், தமிழக அமைச்சர் ஒருவரின் தொழில்முறை பங்குதாரராக இருந்து வருகிறார். இவர் மூலம் அமைச்சருக்கு, அசோக்குமார் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். அந்த காரை தற்போதும் அமைச்சர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 மாடி கலெக்டர் அலுவலகத்தை அசோக்குமாரின் அன்னை இன்பரா நிறுவனம்தான் கட்டி வருகிறது. தமிழகத்தில் அமைச்சர் பின்புலத்தில் கிடுகிடுவென வளர்ந்த இந்த நிறுவனம், ஆந்திர மாநிலத்தில் மாட்டிக்கொண்டதால் மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியா முழுவதும் நடந்த  இந்த மோசடியில் அசோக்குமாருக்கு பின்புலமாக இருந்த தமிழகத்தின் பிரபலங்கள், மத்திய அரசின் அதிகாரிகளால் வெளிச்சத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: