மகாராஷ்டிரா, அரியானாவில் 21ம் தேதி வாக்குப்பதிவு: நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது

மும்பை: மகாராஷ்டிரா, அரியானாவில் வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. அதனால், தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டசபையின் பதவி காலம் வருகிற நவ. 9ம் தேதி முடிவடைகிறது. இதேபோல், அரியானா மாநிலத்தில், 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையின் பதவிகாலம் நவ. 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. மேற்கண்ட இருமாநிலங்களிலும் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலங்களில் வருகிற  21ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிராவில் 8 கோடியே 90 லட்சம் வாக்காளர்களும், அரியானாவில் 1 கோடியே 82 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

மேற்கண்ட இரு மாநில சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் 21ம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாக, தமிழ்நாடு- 2, உத்தரபிரதேசம்- 11, கேரளா- 5, பீகார்- 5, அசாம்- 4, பஞ்சாப்- 4, குஜராத்- 4, சிக்கிம்- 3, ராஜஸ்தான்- 2, இமாசலபிரதேசம்- 2, புதுச்சேரி, அருணாசலபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 49 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் உச்சநீதிமன்ற தடையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி, கூட்டணி முடிவானது. அதன்படி, 288 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளிலும், மீதமுள்ள 38 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், தற்போது பாஜ - சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. 288 தொகுதிகளில் பாஜ 152 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதர கட்சிகளுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில் 288 இடங்களுக்கு 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 235 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரியானாவில், பாஜ - காங்கிரஸ் கட்சிகள்தான் பலம்வாய்ந்த சக்திகளாக உள்ளன. சில மாநில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை இருகட்சிகளும் சந்திக்கின்றன. மொத்தமுள்ள 90 இடங்களுக்காக 1,168 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால், இருமாநிலங்களிலும் கட்சித் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

அரியானாவில், பிரதமர் மோடி இன்று கோஹானா மற்றும் ஹிசாரில் தேர்தல் பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதேபோல், பாஜவின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் இன்று மூன்று இடங்களில் உரையாற்றவுள்ளார். அதேபோல், மனோகர் லால், ஜெனரல் வி.கே.சிங், நடிகை ஹேமமாலினி, மனோஜ் திவாரி ஆகியோரும் இன்று பிரசாரம் செய்ய உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மகேந்திரகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். பிற்பகல் மஹிந்தர்கர்ஹ் பகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், பூபேந்திர ஹுடா, சச்சின் பைலட், ஆனந்த் சர்மா ஆகியோரும் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

மகாராஷ்டிராவில், பிரதமர் மோடி இன்று மும்பையில் பிரசாரம் செய்கிறார். பாஜ தேசிய தலைவர் அமித் ஷா கட்சிரோலி, சந்திரபூர், யவத்மால் மற்றும் ஜல்னா மாவட்டங்களில் நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜ தலைவர்களும் இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்த உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா ஆகியோரும் இன்று மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்வதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories: