தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 3,500 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பெரியவர் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காய்ச்சல் காரணமாக குழந்தை உட்பட 3 பேர் இதுவரை உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.

வேலூர், சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்திய அளவில் கர்நாடக மாநிலத்தில் 25 சதவீதம், ஆந்திர மாநிலத்தில் 15 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 5 சதவீதம் மட்டும் குறைவாக உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களில் 50 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுடன் 107 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு ரெட் ஜோன் எனப்படும் தனிப்பிரிவில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் இதுவரை ஒரே ஒரு உயிரிழப்பு மட்டுமே டெங்குகாய்ச்சலால் நிகழ்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அந்த மரணத்தையும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: