நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரிய சுயேட்சை வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கரசுப்ரமணியின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே சேரகுளத்தைச் சேர்ந்தவர் சங்கரசுப்ரமணியன். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர். இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் சமூக விரோதிகள் பலர் லாட்ஜ்களில் தங்கியுள்ளனர்.

7க்கும் அதிகமான அமைச்சர்களும் தனியார் வீடுகளில் தங்கி, அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக சமூகவிரோதிகள் மற்றும் குண்டர்கள் மூலம், ஒரு வாக்காளருக்கு ரூ.2 ஆயிரம் என இதுவரை ரூ.20 கோடி வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரைதான் செலவிட முடியும். சமூகவிரோதிகள் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடக்கூடும். இதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் தவறிவிட்டனர். எனவே, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்கவோ அல்லது நவ.21க்கு பிறகு நடத்தவோ தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது என்று சுயேட்சை வேட்பாளர் சங்கரசுப்ரமணியின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்தலை தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: