முதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு

துபாய்: முதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் 2023ம் ஆண்டு முதல் அடுத்த 8 ஆண்டுகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டன.

இது குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், கிரிக்கெட் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை கருத்தில் கொண்டு, சர்வதேச மற்றும் பெரிய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை மாற்றி மாற்றி ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டிகளும் அடங்கும். ஐசிசியில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் சமமான எண்ணிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் நன்கு ஆலோசித்து 2023ம் ஆண்டு முதல் அடுத்த 8 ஆண்டுகளுக்கான இந்த அட்டவணையை தயார் செய்துள்ளோம். குறிப்பாக 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டிகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.

முதன் முதலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் 2021ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறும். தொடர்ந்து இந்த உலகக்கோப்பை போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். தவிர மகளிர் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பரிசுத்தொகை, பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரின் இறுதிப்போட்டி, சர்வதேச பெண்கள் தினத்தில் எம்சிஜி மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: