இவருக்கு நாடகமே வாழ்க்கை!

‘ABCD’, ‘தர்மா த்ரூ ட்ராமா’ (dharma throw drama) என்னும் பெயரில் குழந்தைகளுக்கு நாடக கலையை சொல்லிக்கொடுத்து வரும் அ.செல்வம் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே நாடகங்கள் மீது ஆர்வமாம். அப்போது அவரது அப்பா, அழைத்துச் சென்று காட்டிய சினிமாப் படங்களும் கலைமீது இவரை பிடித்துக் கொள்ள வைத்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து தன் குழந்தைமையை இழக்காமல் குழந்தைகளோடும், நாடகத்தோடும் பயணப்பட்டு வருகிறார் செல்வம். குழந்தைகளுக்கு நாடகக் கலை மூலமாக நன்னெறி கல்வியை கொடுப்பதே தன் நோக்கம் என்கிறார்.“மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் வாங்குகிற குழந்தைகள் சமூகத்தில் நல்ல

மனிதர்களா வளருகின்றார்களா என்றால் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.

நாடகங்கள் மூலம் ஒரு குழந்தையை பொறுப்புள்ள மனிதனாக வளர்த்தெடுக்க முடியும் என்று நம்புகிறேன். குறிப்பாக பாடபுத்தகங்களைத் தாண்டி குழந்தைகள் நிறைய சிந்திக்கிறாங்க. அந்த சிந்தனைக்கு யாரும் செயல் வடிவம் கொடுப்பதாக தெரியவில்லை. அதை யாரும் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை” என்று பேச ஆரம்பிக்கிறார் செல்வம்.

 

“நாடக அறிமுகம்?”

“தமிழ்நாடு இறையியல் கல்லூரி நடத்துகிற பாலர் பள்ளியிலே தான் பதிமூணு வயசு வரைக்கும் படிச்சேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான்  நாடகம் அறிமுகம் ஆச்சி.”

“குறிப்பா குழந்தைகள் கிட்ட நாடகத்தைக் கொண்டுப்போக காரணம்?”

“அடுத்த தலைமுறை ஆரோகியமான சமூகமா இருக்கணும்னா குழந்தைகளையே நல்ல மனிதர்களா வளர்த்தெடுக்கணும். எனக்கு தெரிஞ்ச நாடகம் மூலமா குழந்தைகள் கிட்ட நன்னெறிய  சொல்லித் தரணும்னு நினைச்சேன்.”

“வருமானம்?”

“மதுரை  டிவிஎஸ் லட்சுமி சர்வதேச பள்ளியிலேயும், தஞ்சை கல்பாத்ரு  பள்ளியிலேயும் நாடக ஆசிரியரா வேலை பார்க்கிறேன். அதிலே கிடைக்கிற வருமானத்திலதான் என் பயணம் தொடருது.”

“குழந்தைகள் கற்றலில் சந்திக்கிற பிரச்சனை?”

“எல்லா குழந்தையும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை. நான் போகுற எல்லா அரசு பள்ளியிலேயும் பல பிரச்சனையோடு தான் குழந்தைங்க வர்றாங்க. அவங்க கத்துக்கிற மனோபாவமே வித்தியாசமா இருக்குது.  பாடல் மூலமா, விளையாட்டு மூலமா கத்துக்கிறாங்க. சில குழந்தைகள் பாட புத்தகம் மூலமாவே பாடம் கத்துக்கிறாங்க. ஆனா நம்ம பிளாக் போர்டும் சாக் பீசு மட்டுமே காட்டி ரொம்ப நாளா சொல்லிக்கொடுத்துட்டு வர்றோம். குழந்தைங்க கத்துக்க தயாரா இருக்காங்க நம்ம தான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லித் தரணும்.”

“குழந்தைகள் விரும்பி நடிக்கிற நாடகம்?”

“கற்பனைக்கு எட்ட முடியாத, அவங்க  வாழ்ந்து பார்க்காத காதாபாத்திரத்தை நடிக்க  ஆசைப்படுறாங்க. நிறைய குழந்தைகள் கிட்டே சினிமா தாக்கம் இருக்கிறதையும் பார்க்கிறேன். குழந்தைகள் நிஜமாவே டாக்டராவோ, இன்ஜினியராவோ ஆகுறாங்களோ இல்லையோ நாடகத்தில அந்த கதாபாத்திரமா நடிக்கும் போது ரொம்ப சந்தோசப்படுவாங்க.”

“நாடகத்துக்கான கதைகள்?”

“குழந்தைகளின் வாழ்க்கையில இருந்து தான் கதைய உருவாக்குறோம். குழந்தைகளின் சூழ்நிலைகளை, நேற்று என்ன வீட்ல நடந்துச்சி என்றெல்லாம் கேட்பேன். அவர்கள் சொல்லுகிற கதைகளைத் தான் நாடகங்களா ஆக்குறோம். உதாரணத்துக்கு குழந்தைகள் தாத்தா கூட ஆடு மேய்க்க போனதை சொல்லுவாங்க. அம்மா கூட கட்டட வேலைக்குப் போனதை சொல்லுவாங்க. அதை எல்லாம் கதையா மாத்துவேன். குழந்தைகள் சந்திக்கிற சம்பவங்கள் தான் கதைக்கரு.”

“குழந்தைகளை சமாளிக்கிற உத்தி?”

“நான் கத்துக்கொடுக்க போறேங்கிற மனநிலையோட போகும் போது தான் குழந்தைகளுக்கும் நமக்குமான இடைவெளி ஏற்படும். முதல்லே குழந்தைகளைப் பங்கேற்க வைக்கணும் சிந்திக்க வைக்கணும் அப்போ குழந்தைகள் தன்னால நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடுவாங்க. நட்புறவோட பழகணும். எப்பவுமே குழந்தைங்க ஒரு டீச்சரோட அணுகுமுறைய கண்டுபிடிச்சி வச்சிருப்பாங்க. அதனால நம்ம ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா அவங்களுக்கு தெரியணும். புதுசா சொல்லிக்கொடுக்கணும். நூறு குழந்தைகளைக் கூட சுலபமா சமாளிக்கலாம் நம்மலோட அணுகுமுறை சரியா இருந்தா போதும்.”

“நாடகம் ஏற்படுத்துற மாற்றம்?”

“நாடகம் சும்மா கை தட்டிட்டு போகுற விசயமா இருக்காது. நாடகம் உடல் ரீதியாவும் மன ரீதியாவும் தூண்டுதலை ஏற்படுத்தும். அவர்களுக்குள்ள ஒரு ஒழுக்கத்தைக் கொண்டு வரும்.”

“நாடகத்துலே உங்களுக்கு என்னதான் கிடைக்குது?”

“யார்கிட்டேயும் சொல்ல முடியாம மனசுக்குள்ள அடைச்சி வச்சிட்டு இருக்கிற ஒன்னை நாடகம் மூலமா வெளிக்கொண்டு வருவேன். அப்போ அந்த குழந்தைகள் என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் போதும் திரும்ப எப்போ சார் வருவீங்கண்ணு கேட்கும் போதும் திருப்தியா இருக்கிறதா தோணும். அவர்களோட உணர்வுகளை கேட்குறதுக்கு யாரும் இல்லை. அதற்கான வாய்ப்பை நாடகம் கொடுக்குதுன்ணு நினைக்கிறேன்.”

தொகுப்பு: தீக்சா தனம்

Related Stories: