2020 பிப்ரவரி வரை பாகிஸ்தான் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் நீடிக்கும்: நிதி செயல் நடவடிக்கை குழு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: தீவிரவாத செயலை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கறுப்பு பட்டியலிலேயே தொடர்ந்து வைத்திருக்க நிதி செயல் நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத நிதியுதவியை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க ஜி7 நாடுகளால் 1989-ல் நிதி செயல் நடவடிக்கைக் குழு (எப்ஏடிஎப்) உருவாக்கப்பட்டது. பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த குழு விதிமுறைகளை மீறும் நாடுகளை கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. 

இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடமிருந்து நிதியுதவி பெறுவது கடினம் ஆகும். தீவிரவாத செயலுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எப்ஏடிஎப் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த மாத இறுதியில் இந்த தடை காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், எப்ஏடிஎப் மறு ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் பாரிஸில் நடைபெற்றது. இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத நிதியுதவியைத் தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

அப்போது தீவிரவாத நிதியுதவியை முழுவதுமாக தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இக்குழு பாகிஸ்தானை எச்சரித்ததாக கூறப்படுகிறது. கறுப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை விடுவிப்பது குறித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2020 பிப்ரவரி வரை பாகிஸ்தான் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Related Stories: