காற்று மண்டலத்தில் புகுந்து பாயும் காஸ்மிக் கதிர்கள்!

சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத்துகள் காஸ்மிக் கதிர் (Cosmic Rays) எனப்படுகிறது. இதைத் தமிழில் அண்டக்கதிர் என்பார்கள். இது மின்னூட்டப்பட்ட (Charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டவட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின்போதுதான் பாசிட்ரானும் பல்வேறு மேசான்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் காணப்படுகின்றன. அண்டவெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாகக் கருதப்படுவதாலும் இது அண்டக்கதிர் எனப் பெயர் பெற்றது.

அண்டக்கதிர்கள், பூமியின் காற்று மண்டலத்தைத் துளைத்துப் பாதிப்பு உண்டாக்கவும், நிலப்பரப்பிற்குமே கூடச் செல்லும் அளவிற்கும் சில இரண்டாம் நிலைத் துகள்களின் தூறலைப் பொழியக் கூடியதாகும். இது முதன்மையான உயர்-ஆற்றல் புரோட்டான்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. அண்டக்கதிர்கள் விண்ணில் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. இத்துகள்களில் சில பூமிக்கு வரும்நிலை ஏற்படுகிறது. அப்போது அவை பூமியின் காற்று மண்டலத்திற்குள் புகுகின்றன.

பூமிக்கு வரும் கதிர்கள் குறைவான அலை நீளத்தையும் அதிகமான அதிர்வெண்களையும்  கொண்டவையாகும். இந்த அணுத்துகள்கள் ‘முதல்வகை காஸ்மிக் கதிர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த முதல் வகை அணுத்துகள்கள் காற்று மண்டலத்திற்கு வந்தவுடன் அங்குள்ள உயிர்க் காற்று (ஆக்ஸிஜன்) நீர்க்காற்று (ஹைட்ரஜன்) அணுக்களுடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் புதிய துகள்களை உண்டாக்குகின்றன. மோதல்களினால் உண்டாகிய புதிய துகள்களுக்கு, இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் என்று பெயர். இந்த இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் மேலும் அணுக்களுடன் மோதி மேலும் புதிய துகள்களை உண்டாக்குகின்றன.

Related Stories: