மர்ம தவளை

நன்றி குங்குமம் முத்தாரம்

சுமார் 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தவளை. பூமியில் 4,800 வகையான தவளை இனங்கள் உள்ளன. 85 சதவீத தவளை இனங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை.  காட்டிலுள்ள பூச்சிகளை உண்டு வாழும் தவளைகள், பாம்புக்கு உணவாகப்  பயன்படுவதால் உணவுச்சங்கிலியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் தவளை இனங்கள் அதிவேகமாக அழிந்து வருகின்றன. 1950-களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பகுதி தவளை இனங்கள் அழிந்துவிட்டன. காடுகளை அழித்தது இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.  அவ்வப்போது ஆய்வாளர்கள் புதிய தவளை இனத்தைக் கண்டு பிடித்திருக்கிறோம் என்று அறிவியல் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பார்கள். இப்படி கண்டுபிடிக்காமல் இருக்கும் தவளை இனங்களும் ஏராளம். இந்நிலையில் பல்லுயிர்களின் புகலிடமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையை எடுத்துக்காட்டும் கேரள மாநிலம் வயநாட்டில் புதிய தவளை இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து வரும் மாணவி சோனாலி.  வன உயிர்கள் மற்றும் இயற்கை சார்ந்து ஆய்வு செய்து வருகிறார். அவரின் ஆய்வு வழிகாட்டி பிஜு. இருவரும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நடத்திய ஆய்வில் தான் இந்தத் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குட்டையில் இந்த தவளையைக் கண்டிருக்கிறார் சோனாலி. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்துக்கு மிஸ்டி செலஸ் (Mysticellus) என்று பெயர் சூட்டியுள்ளனர். Mysticellus என்னும் இலத்தீன் வார்த்தைக்கு மர்மம் மற்றும் மிகச் சிறியது என்று பொருள். மிகச்சிறிய அளவில் உள்ள இந்தத் தவளைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே வெளியில் வருகின்றன. மற்ற நேரங்களில் யார் கண்ணிலும் படாத ஒரு ரகசிய வாழ்க்கையை வாழ்கின்றன. அதனாலேயே இந்தப் பெயர்.

Related Stories: