பிளாஸ்டிக் இல்லாத கிராமம்

நன்றி குங்குமம் முத்தாரம்

அந்தக் கிராமத்துக்குள் எந்த வாகனம் நுழைந்தாலும் நாலைந்து பேர் ஓடி வந்து வாகனத்தை நிறுத்தி சோதனை இடுகிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பொருள் ஏதாவது வாகனத்துக்குள் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.  எதுவும் இல்லையென்றால் ‘‘சிரமத்துக்கு மன்னிக்கவும். உங்களின் பயணம் சிறப்படையட்டும்...’’ என்று சொல்லி வழி அனுப்புகிறார்கள். இதை அந்த ஊர் மக்களே தன்னார்வலர்களாக இருந்து செய்கிறார்கள். அந்தக் கிராமத்தின் இயற்கை வளங்களை கடவுளாகக் கொண்டாடுபவர்கள் அவர்கள். அங்கே ஒரு துளி பிளாஸ்டிக் கூட இருக்கக்கூடாது என்பது அந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு.  பிளாஸ்டிக்குக்கு பதிலாக மூங்கிலால் ஆன பாட்டில், கூடையைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு முன் பயன்படுத்திய பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து செடிகளை வளர்க்கிறார்கள். அந்தக் கிராமத்தின் பெயர் லாச்சுங். சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் தான் லாச்சுங்.

கடல் மட்டத்திலிருந்து 9,600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிறிய ஊர். அழகழகான குன்றுகள், பசும்புல்வெளிகள் என கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் இங்கே ஏராளம். இதனால் அங்கே சுற்றுலாப் பயணிகள் மொய்க்கிறார்கள். இந்த ஊருக்கான தனிச்சிறப்பே பிளாஸ்டிக் தடை தான். குறிப்பாக விலைக்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை ஊருக்குள் எடுத்துச் செல்லவே முடியாது. மீறி எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம். தவிர, எந்த வகையான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் அனுமதியில்லை. பொதுவாக நம் நாட்டில் அரசு தடை விதிக்கும். தடையை மீறினால் அபராதம் என்று சொல்லும். மக்களும் சில நாட்களுக்கு அந்த தடையை மதித்து எதுவும் செய்ய மாட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து தடை விதிக்கப்பட்ட பொருள் மறுபடியும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். பெரும்பாலும் தடை என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே இங்கே இருக்கிறது. ஆனால், லாச்சுங்வாசிகள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கின்றனர். அதனாலேயே இன்று இந்தியாவில் பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத ஒரே ஊராக மிளிர்கிறது லாச்சுங்.

Related Stories: